வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்
நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி, பிப்-6

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 73-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இது விவசாயிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பிறகு 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து அமைதியாக போராடி வருகிறார்கள்.
அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம் என்பதை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று ‘சக்கா ஜாம்’ எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு விவசாயிகளின் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது ஆம்புலன்ஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்ற வாகனங்கள், அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆகியவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அவற்றை விவசாயிகள் அனுமதித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள்.
மறியல் போராட்டத்தின்போது சாலையில் சிக்கி கொண்ட வாகன ஓட்டிகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை விவசாயிகள் வழங்கினார்கள். மேலும் ஆரோக்கிய உணவுகளான கொண்டைகடலை, பச்சை பட்டாணி ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கி வேளாண் சட்டங்களின் பாதகங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
டெல்லியில் அனைத்து போராட்டங்களும், மறியல் தளங்கள் போலவே காணப்படுவதால் டெல்லிக்குள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படவில்லை என்று விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்படவில்லை.
அதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் இன்று மறியல் போராட்டம் நடத்தப்படாது என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்திருந்தனர். அங்கு கரும்பு அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மறியல் போராட்டம் நடத்தப்படவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். அதன்படி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். வன்முறை சம்பவங்கள் ஏற்படாத வகையில் டெல்லி முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.