100வது டெஸ்டில் இரட்டை சதம் எடுத்து உலக சாதனைகளை முறியடித்தார், ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட், இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்.

சென்னை, பிப்-6

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிர்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 260 பந்துகளில் ஜோ ரூட், 150 ரன்களை எட்டினார். கடந்த மூன்று டெஸ்டுகளிலும் அவர் 150 ரன்களைக் கடந்து சாதனை செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ், 73 பந்துகளில் அரை சதம் எட்டினார். 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகும் விரைவாக ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 195 ரன்களில் இருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து இரட்டைச் சதம் எடுத்தார். 341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.

இது ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டைச் சதம். 100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். இலங்கையில் இரட்டைச் சதம் எடுத்த ரூட், இந்தியாவிலும் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இதனால் 23 நாள்களில் இரு இரட்டைச் சதம் எடுத்து மகத்தான வீரராக விளங்குகிறார்.

அத்துடன் 100வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்தார். இன்சமாம் உல் ஹக் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இதேபோல் 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 100 போட்டிகளில் 8,405 ரன்கள் எடுத்திருந்தார். ஜோ ரூட் 8,458 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 147 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்தது. ரூட் 209, போப் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

போப் 34 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 218 ரன்கள் எடுத்த பிறகு நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஜோ ரூட். இதன்பிறகு 5 பவுண்டரிகள் அடித்த பட்லர், 30 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே ஆர்ச்சரும் போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 180 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பெஸ் 28, ஜாக் லீச் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *