100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்வு.. விக்கிரமசிங்கபுரம் மாணவி தேர்வு!!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு சாதனை நிகழ்வாக 100 சிறு செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்க நெல்லையைச் சேர்ந்த மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம், பிப்-6

ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு பிப். 7 ஞாயிற்றுக்கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தயாரிக்கும் 100 சிறு செயற்கைக் கோள்கள் ஏவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள வெளியுலகில் அறியப்படாத திறமை மிகுந்த கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அனைத்திந்திய அளவில் கிராமப்புறங்களிலிருந்து ஆயிரம் மாணவர்கள், மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறு செயற்கைக்கோள் தயாரிக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து பலூன் மூலம் செலுத்தப்படும் ஃபெம்டோ எனப்படும் சிறு செயற்கைக்கோள்களை மாணவர்கள் தயாரித்தனர்.

இந்நிலையில் சென்னை நல்லோர் வட்டம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சென்னையில் 6 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஓசோன் அளவு, காற்றின் வேகம், கதிர்வீச்சு, விவசாயம் போன்றவற்றை கணக்கிட இந்த செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விவசாயம், சுற்றுச் சூழல், புவிவெப்பம், கதிர்வீச்சு ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் தயாரித்த 100 சிறு செயற்கைக் கோள்கள் பலூன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஏவப்படுகிறது.

இந்த நிகழ்வு உலக சாதனை பதிவு அமைப்பான கின்னஸ், இந்திய சாதனைப் பதிவு அமைப்பு, ஆசியா சாதனைப் பதிவு அமைப்பு உள்ளிட்டவை கண்காணித்து சாதனையாகப் பதிவு செய்யவுள்ளன.
விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி முத்து அபிராமி இந்திய அளவில் வெளியிடப்படும் மாணவர் கடமை என்ற மின்னிதழின் ஆசிரியராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *