நான் சொல்வதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி அப்படியே செய்கிறார்.. குமுறிய மு.க.ஸ்டாலின்

திமுக சொல்வதையெல்லாம் அப்படியே செய்வதுதான் எடப்பாடியின் வேலை என ஸ்ரீவைகுண்டம் தொகுதி நட்டாத்தியில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி, பிப்-6

தூத்துக்குடி தெற்கு திமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ தொகுதிகளை உள்ளடக்கிய ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி நட்டாத்தி பட்டாண்டிவிளையில் நேற்று பிற்பகலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வரவேற்றார். பின்னர் நிகழ்ச்சி அரங்கம் முழுவதும் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் சென்று மக்களோடு மக்களாக இணைந்து மு.க.ஸ்டாலின் கை குலுக்கினார். தொடர்ந்து மனு அளித்த பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.

மக்களை சந்தித்து குறைகேட்ட பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் அதிமுக ஆட்சி 3 மாதத்தில் முடியப்போகிறது. மக்கள் ஆட்சி மலரப்போகிறது. அதிமுக ஆட்சி முடியப்போகிறது என்பதை நம்மை விட அதிமுகவினரே அதிகம் உணர்ந்துள்ளனர். கடைசி நேரத்தில் எதையாவது செய்துவிட துடியாய் துடிக்கின்றனர். மக்கள் மத்தியில் பெயர் வாங்கிட விளம்பர வெளிச்சத்தை நாடுகின்றனர். அதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய கேட்டபோதெல்லாம், அதை மறுத்துவிட்ட முதல்வர், இப்ேபாது அறிவிப்பதன் காரணம் என்ன?. கடன்களை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் வரை அதிமுக அரசு சென்றது. ஆனால் இப்போது தேர்தல் சுயலாபத்துக்காக பயிர்கடன்களை பழனிசாமி ரத்து செய்திருக்கிறார். திமுக சொல்வதையெல்லாம் அப்படியே செய்வதுதான் முதல்வரின் வேலை.

எழுவர் விடுதலைக்காக நாங்கள் தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம். அதன்பின்னர் அவரும் சந்தித்து முறையிட்டார். ஆனால் சரியாக அவர் வலியுறுத்தவில்லை. விளைவு என்னால் எதுவும் முடியாது என கவர்னர் கைவிரித்து விட்டார். இத்தகைய நாடகங்களை முதல்வர் பழனிசாமி நீட் தேர்விலும் நடத்தினார்.2011ம் ஆண்டிற்கு முன்னால் திமுக ஆட்சி எப்படி இருந்தது? கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் ஆட்சியில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது. தென்மாநிலங்களில் தனிநபர் வருமானம் அடிப்படையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது தனிநபர் வருமானம் மிகவும் குறைந்துவிட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் 21.50 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல் பயிரிடும் பரப்பு குறைந்து தரிசு நிலங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னதை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக நிறைவேற்றியுள்ளதா என பார்த்தால் அதுவும் இல்லை. விவசாயத்தில் புரட்சி கொண்டு வருவோம் என்றார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்போம் என்றார். ஏதாவது நடந்ததா? கரும்பு போல மற்ற விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிப்போம் என்றார்கள். சொட்டுநீர் பாசனத்தை இலவசமாக செய்து கொடுப்போம் என்றார்கள். ஏதாவது நடந்ததா? தமிழகத்தை எதில் வளர்த்தீர்கள் என கேட்டால், இரு விஷயங்களில் மட்டுமே வளர்த்துள்ளனர். ஊழல், விலைவாசி ஆகிய இரண்டில் மட்டுமே அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. இத்தகைய வேதனைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் உரிமைகளை, சலுகைகளை இழந்துள்ளனர். எங்களை சந்தித்து பொதுமக்கள் மனுக்கள் அளிக்கின்றனர் என்றால் சொன்னதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கையில்தான். முதல்வரும், அமைச்சர்களும் ஒழுங்காக பணியாற்றி இருந்தால் என்னிடம் ஏன் மனு தரப்போகிறார்கள்?. இந்த ஸ்டாலினை நம்பி வந்தவர்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்’’

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *