ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தின் காவல் 14 நாட்கள் நீட்டிப்பு

புதுடெல்லி, அக்டோபர்-30

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்தது. அவரை 30-ம் தேதிவரை விசாரிக்க அமாலக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில், சிதம்பரத்துக்கான விசாரணைக் காலம் முடிந்ததையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹெர் முன் ஆஜர்படுத்தினார்கள். அமலாக்கப்பிரிவு கூடுதலாக ஒருநாள் காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குச் சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குஹெர் ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தார். சிதம்பரத்தின் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்திய கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *