7 பேரை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம்.. கையை விரித்த ஆளுநர் பன்வாரிலால்!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-4

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இதற்கிடையே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கிறஞர் தெரிவித்தார். இருப்பினும்,

விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில், கடந்த 22-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையீட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்று மாலை வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநரின் முடிவு என்ன என்றே தெரியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் ஏழு பேரை விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு பிரமாண பத்திரம் மூலம் தகவல் அளித்துள்ளார். தமிழக அரசின் பரிந்துரையை கடந்த மாதம் 25-ந்தேதியே நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *