அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை.. தமிழக டிஜிபி-யிடம் அமைச்சர்கள் புகார்
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை. பிப்-4

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சசிகலாவுக்கு கடந்த 27ம் தேதி தண்டனை காலம் முடிந்ததால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சைமுடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியபோது சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். இனி சசிகலா தமிழகம் வரும்போது தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி கூறுகையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. உறுப்பினராக இருந்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதி என தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் செல்ல வேண்டும் என்றால் ஐ.நா. அவைக்கு தான் சசிகலா செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவிற்கு தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை சுட்டிக்காட்டினார். தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியானதையும் அவர் குறிப்பிட்டார்.