பயங்கரவாதிகளால் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவு
தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பிப்-4

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் அண்ணாமலை தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார். தொடர்ந்து, அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பாஜகவின் இணைந்த நாள் முதல் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களால் ஆபத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்பேரில் தமிழக போலீசின் பாதுகாப்பு சீராய்வு குழுவினர் (SRC) அண்ணாமலைக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இவர் தங்கியுள்ள இடத்தில் 5 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்பிற்கு செல்லும் வகையில் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் (PSO) செல்ல உள்ளனர். அவர்களில் ஒருவர் பாதுகாவலர் சீருடையிலும், மற்றொரு சாதாரண உடையிலும் இருப்பார். அண்ணாமலை எங்கு சென்றாலும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மாவட்ட போலீசார் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.