பையனூரில் ஜெயலலிதா படப்பிடிப்புத் தளம் அமைக்க ரூ.3.5 கோடி, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் முதல்வர் வழங்கினார்

பையனூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளத்தை அமைக்க 3-ம் கட்ட நிதியாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

சென்னை, பிப்-4

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

”செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையினை ஏற்ற முதல்வர், ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் ஜெயலலிதா படப்பிடிப்புத் தளம் அமைப்பதற்கு முதல் கட்டமாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் 16.9.2019 அன்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், 1.6.2020 அன்று இரண்டாம் கட்டமாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதல்வரால் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது மூன்றாம் கட்டமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தமிழ்நாடு முதல்வர், இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்பட உலகுக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்திட 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, 2018-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். 2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

அந்த வகையில், தற்போது சென்னையில் 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ள 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் இன்று, இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் வழங்கினார்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *