7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.. முதல்வர் புகார்
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் திமுக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, பிப்-4

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 அதிமுக ஆட்சியில் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 பேர் விடுதலை குறித்த நடவடிக்கைகளை எடுத்தது முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அரசும் மட்டும் தான். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பய்ஸ் ஆகியோர் விடுவிக்க வேண்டும் என ஏற்கனவே பேரவையிலும் அமைச்சரவையிலும் தீர்மானத்தை கொண்டு வந்தது அதிமுக தான்.
அதிமுக அரசை பொறுத்தவரை உண்மையாகவே 7 பேருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து திமுகவினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 7 பேரை விடுவிக்கக்கோரிய தீர்மானம் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7 பேரின் விடுதலை விவகாரத்தை பேரவையிலும், அமைச்சரவையிலும் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். ஆனால், திமுக ஆட்சியின் போது நளினிக்கு மட்டும் கருணை மனுவை ஏற்று ஆயுள்தண்டனையாக குறைக்கவும், பிறரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முடிவு எடுத்தது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனரை சந்தித்து அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.தற்போது 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் தொடந்து வலியுறுத்தி வருகிறோம். ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை. விரைவில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்,’என்றார்.