சசிகலா தமிழகம் வரவுள்ள தேதியில் மாற்றம்
சசிகலா புறப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ம் தேதிக்கு பதில், 8ம் தேதி காலை 9 மணியளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப்-4

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து டிசம்பர் 31-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் அவர் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக டிடிவி தினகரன் முன்பு அறிவித்திருந்தார்.
இதனிடையே சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை டி.டி.வி. தினகரன் செய்துவருகிறார். ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு அ.ம.மு.க. சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட அ.ம.மு.க.வினர் இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று தினகரன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.