இழுத்தடிக்கும் ஆளுநர்..! 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு 9ம் தேதி விசாரணை

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

டெல்லி, பிப்-4

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உள்ள பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

இதனால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்தது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

உச்சநீதிமன்ற அளித்த ஒரு வார கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை உடன் முடிவடைந்தது. தற்போது வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார்.

ஆளுநரின் முடிவு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பேரறிவாளன் வழக்கை பிப்ரவரி 9ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அப்போது ஆளுநரின் முடிவு குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *