உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை, பிப்-4

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 3ம் தேதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவையின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆன்லைனில் சூதாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இதனை வருகிற 2021 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பான மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

நாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

தற்போது 10 ஆவது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *