ஆன்லைனில் சூதாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.. தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் !

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

சென்னை, பிப்-4

தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவையின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்
தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக மக்கள் குரலெழுப்பியதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திற்கு மாற்றாக தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆன்லைனில் சூதாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *