சசிகலா சபதம் எடுக்க வருவார் என்பதற்காக ஜெயலலிதா நினைவிடம் மூடல்.. உதயநிதி ஸ்டாலின்

ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு சசிகலா சபதம் செய்ய வந்து விடுவார் என்ற காரணத்திற்காகவே அண்மையில் திறக்கப்பட்ட நினைவிடம் மூடப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம், பிப்-3

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்தார். பின்னர் பேசுகையில், ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. நீட் தேர்வால் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து சபதம் செய்ய வருவார் என்ற காரணத்திற்காகவே அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நினைவு மண்டபம் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போல அதிமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எடப்பாடி கே.பழனிசாமி மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை. அடுத்தவர் காலில் விழுந்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடித்து வருகிறார்.

மோடியின் அடிமையாக, பா.ஜ.கட்சியின் அடிமையாக எடப்பாடி கே.பழனிசாமி இருந்து வருகிறார். அதிமுக என்றால் அண்ணா திமுக இல்லை, அடிமை திமுக என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *