விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க பாடகி ரிஹானா..! முட்டாள் என திட்டிய கங்கணா ரணாவத்
சர்வதேச பாப் பாடகியான ரிஹானா டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகை கங்கணா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி, பிப்-3

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் தீர்வு எட்டப்படவில்லை. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் இம்மாதம் 6ம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானா, குரல் கொடுத்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கொள்காட்டி, நாம் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை? என்று ரிஹானாகேள்வி எழுப்பியிருந்தார். மேலும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றையும் பதிந்துள்ளார்.
அவரது ட்விட்டை லட்சக்கணக்கானோர் பகிர்ந்ததுடன் ஆதரவாகவும் பதிவிட்டனர். அவரது பதிவிற்கு இந்தியாவில் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் சாடி உள்ளார்.
‘டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும். முட்டாள்… நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’ என கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா ரணாவத்துக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.