மராட்டியம்: சட்டப்பேரவை தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

மும்பை, அக்டோபர்-30

மராட்டிய மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன. ஆனால், 5 ஆண்டுகால ஆட்சியில், தலா இரண்டரை ஆண்டுகளை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும், இதனை எழுத்துப்பூர்வ உறுதிமொழியாக வழங்க வேண்டும் என்றும் சிவசேனா வலியுறுத்துகிறது.

இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நரேந்திர சிங் தோமர் கூறுகையில் மகாராஷ்டிர மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவிக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் தவிர வேறு யாரும் முன்மொழியப்படாததால் அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என தெரிவித்தார். இந்தச் சூழலில், வருகிற வெள்ளிக்கிழமை, தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க கூடும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *