195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் உள்ள 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, தமிழகத்தில், 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி போட தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட 34 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-2

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 39,50,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,866 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த தொற்றும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *