தமிழக சட்டசபையில் ஆளுனர் ஆற்றிய உரை முழு தொகுப்பு

சென்னை, பிப்-2

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தை ஆளுனர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம். ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக சட்டசபை கூட்டம், சட்டசபை வளாகத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் நடந்தது.

ஆளுனர் உரையை வாசித்த பன்வாரிலால் புரோகித் கூறியதாவது ;-

“இன்று நாம், மிகவும் அசாதாரணமான, முன்நிகழ்வுகள் அற்ற சூழலில் சந்திக்கின்றோம். நம் வாழ்நாளில், முன் எப்போதும் காணாத அளவில், மிகப் பரவலான ஒரு பெருந்தொற்று நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன. பெருந்தொற்று நோயின் பரவலை தடுப்பதற்கு, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும், போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர், தேவைக்கு ஏற்ப, படிப்படியாக தளர்வுகள் அனுமதிக்கப்பட்டன.

 • ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை முறையின் விலை, பிற பரிசோதனை முறைகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் உயர்தரத்தினைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே பிரத்தியேகமாக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை முறையைக் கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடாகும்.
 • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். மாநிலம் முழுவதும் கோவிட் தடுப்பூசி திறம்பட வழங்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக, ஏனைய முன்களப் பணியாளர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும், அரசு உரிய நேரத்தில், படிப்படியாக தடுப்பூசியை வழங்கும். இதனால், இயல்பான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
 • 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ததன் மூலம், சமூக நீதி மற்றும் சம நீதியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 435 மாணவர்கள் இந்த ஆண்டில் பயனடைந்துள்ளது மனமகிழ்ச்சி அளிக்கிறது. 2,000 முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள் திட்டத்துக்கு பாராட்டு.
  *நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது. மேலும், ‘இந்தியா டுடே’ பத்திரிகை 2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ‘மாநிலங்களின் நிலை’ என்ற தலைப்பில், மேற்கொண்ட ஆய்வில், ‘ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலம்’ என்று தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு.

*‘அம்மா திட்டம்’, ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘வட்ட இணையவழி மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு’ மற்றும் ‘அம்மா அழைப்பு மையம்’ உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. தற்போதுள்ள அனைத்து குறை தீர்க்கும் அமைப்புகளையும் முதல்வரின் உதவி மையம் வாயிலாக ஒருங்கிணைத்து, ‘முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

அனைத்துக் குறைகளையும் உரிய கால வரம்பிற்குட்பட்டு, தீர்வு காண்பதை உறுதிசெய்யும் வகையில், ஒரு வலுவான வழித்திட்ட அமைப்பும், குறைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முகப்புப் பக்கமும் உருவாக்கப்படும். குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே, முதலமைச்சரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும்.

 • சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே இந்த அரசின் தலையாய நோக்கமாகும். நோயின் தடம் அறிதல், ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை திறம்படக் கண்காணித்தது என பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு காவல்துறையின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் காவல்துறை முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சிறப்பாக நிலைநாட்டப்பட்டது குறித்து பாராட்டு
 • கீழடி அகழ்வாராய்ச்சியில், சங்ககாலப் பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த முக்கிய தொல்பொருட்கள் தற்போது தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதுவரை, சொற்குவை வலைதளத்தில் 3,85,788 சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மாநில ஆட்சிமொழி (சட்டம் இயற்றும்) ஆணையம், 38 மத்தியச் சட்டங்களை தமிழில் மொழியாக்கம் செய்ததுடன், இதுவரை, 10,000- க்கும் மேற்பட்ட சொற்களைத் தொகுத்து, தமிழில் ஒரு சட்ட அகராதியைத் தயாரித்து வருகின்றது.
 • மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ‘வேதா நிலையத்தை’, அரசு கையகப்படுத்தி, ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம், நினைவு இல்லமாக மாற்றி, அதுவும் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என பெயர் சூட்டப்பட்டது. அவரின் உருவச் சிலை நிறுவப்பட்டது. அவரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
 • கோவிட்-19 மீட்டெடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவினங்கள், சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மூலதனச் செலவினங்கள் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் அதிகரிக்கப்பட்டன. கோவிட்-19 நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, இதுவரை 13,208 கோடி ரூபாய், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது.

பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தவோ, குறைக்கவோ இல்லை. உரிய நேரத்தில், செலவு குறைந்த கடன்களைப் பெற்றதன் மூலம், கோவிட்-19 பெருந்தொற்று நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை இவ்வரசு பாதுகாத்துள்ளது.

 • சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதன் விளைவாக, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை சில மாதங்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. மிகவும் கடுமையான நிதி நிலைமை உள்ள இந்த ஆண்டில் கூட, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக, இதுவரை 13,300 கோடி ரூபாயை இந்த அரசு பெற்றுள்ளது.

இத்தொகையில், சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தால் செயல்படுத்தப்படும் உத்தியின்படி, இழப்பீட்டுக்குப் பதிலாக 4,890 கோடி ரூபாய் கடனும் அடங்கும். 2017-18 ஆம் ஆண்டில், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஒதுக்கீடு தொடர்பான பிழையை சரிசெய்து, இறுதியாக 4,321 கோடி ரூபாயை இந்த ஆண்டு தமிழ்நாடு பெற்றது மனநிறைவு அளிக்கின்றது.

 • கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு உதவுவதற்காகவும், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், மேலும் பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைக்க, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான டாக்டர் சி. இரங்கராஜன் தலைமையில் ஒரு உயர்மட்ட வல்லுநர் குழுவை அரசு நியமித்தது.

உயர்மட்டக் குழுவின் பல்வேறு பரிந்துரைகளின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான வலுவான அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன.

 • தொற்றுநோய்க் காலத்தின் போதே, வரலாற்றுச் சாதனையாக, 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக, 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையில், 60,674 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது

2020 ஆம் ஆண்டில், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ ஆகிய இரண்டு புயல்களால் தமிழ்நாடு தாக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் பருவம் மாறி பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன. இரண்டு புயல்களால் 3,750 கோடி ரூபாய் மற்றும் 1,514 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சேதங்களை, விரிவாக விளக்கக் கூடிய இரண்டு கோரிக்கை மனுக்களை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. மேலும், இந்த நிதியை விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் நிதி விடுவிப்பிற்குக் காத்திருக்காமல், பயிர் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும், உச்சவரம்பின்றி நிவாரணத் தொகையை மாநில அரசு வழங்கியுள்ளது. நெல்லுக்கு இடுபொருள் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், இந்த அரசு நிவாரணத் தொகையாக வழங்கியது. இரண்டு புயல்கள் மற்றும் ஜனவரி மாதத்தில் பருவம் மாறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 16.78 இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 1,715 கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகின்றது. உரிய நேரத்தில் இந்த அரசு நிதி உதவியினை வழங்கியதால் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக, மாநிலம் முழுவதும் அரிசி குடும்ப அட்டையைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீவிர ஊரடங்கை அறிவித்தபொழுது, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் மதுரை மாநகரத்தில் உள்ள 28,31,535 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதியுதவி ரொக்கமாக வழங்கப்பட்டது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 23,13,957 உறுப்பினர்களுக்கு, 476 கோடி ரூபாய் நிதியுதவி ரொக்கமாக வழங்கப்பட்டது. பெருந்தொற்று நோய், இரண்டு புயல்கள் மற்றும் ஜனவரி மாதத்தில் பருவம் மாறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக, அரிசி குடும்ப அட்டையுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2,500 ரூபாய் நிதியுதவியுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

 • 2017-18 ஆம் ஆண்டு முதல், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,211 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள நீர்ப்பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதற்கான இந்த அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன், 2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை, இந்த அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் வாயிலாக, காவேரி டெல்டா பகுதிகளிலுள்ள வேளாண் விளைநிலங்களும், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  விவசாயிகள், பயிர்க் காப்பீட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பெறவேண்டும் என்பதற்காக, 2020-21 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் நிதிச் சுமையை இந்த அரசு ஏற்று வருகிறது. இந்தியாவிலேயே, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, 2019-20 ஆம் ஆண்டில், 1,112 கோடி ரூபாய் மானியத்துடன் 6.52 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
 • 2011 ஆம் ஆண்டு முதல் இந்த அரசின் முயற்சிகளால், ஊரகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், கால்நடைத் துறையின் பங்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், மொத்தம் 1,06,277 கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு 1,06,277 கறவை மாடுகளும் 12,44,010 கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு 49,76,040 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
  2018 ஆம் ஆண்டு முதல், 3,60,620 ஏழைக் குடும்பங்களுக்கு 1,09,40,500 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. பெருகியுள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தீவனப் பயிர், தீவனம், உயர்தர கால்நடைப் பராமரிப்பு மற்றும் நிலையான சந்தைப்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டு, அவை தொடர்ந்து கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

*நமது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், நமது மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கை கடற்படையினர் அவர்களுடைய கப்பலைக் கொண்டு வேண்டுமென்றே தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகில் மோதியதன் விளைவாக, நான்கு தமிழக மீனவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். இச்செயலை இந்த அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்படி மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இலங்கை நாட்டின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க, அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 • 200 கடல் மைல்கள் பரப்பளவில் உள்ள பிரத்தியேகமான பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்த ஏதுவாக, ஆழ்கடலில் மீன்பிடித்தலை ஊக்குவிப்பது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. மேலும், மீன்பிடி துறைமுகங்கள், மீன் தரையிறங்கும் தளங்கள், குளிர் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகள் உள்ளிட்ட கரையோர உட்கட்டமைப்புகள் விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்பிடித் துறைமுகங்களைக் கட்டுவதற்காக நிதியுதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இஸ்ரோவின் உதவியுடன் செயற்கைக்கோள் அடிப்படையிலான தடையற்ற தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மீன்வளத் துறையின் கீழ், 112 காவல் பணியாளர்களைக் கொண்ட ‘கடல் அமலாக்கப் பிரிவு’ உருவாக்கப்பட்டுள்ளது.

 • தமிழ்நாடு ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வேலை தேடி இடம் பெயரும் ஏழைக் குடும்பங்கள் ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, இத்திட்டம் பெருமளவில் பயனளிக்கும். கோவிட் நிவாரண நடவடிக்கைக்காக கூடுதலாக 19.95 இலட்சம் மெட்ரிக் டன் விலையில்லா அரிசி, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
 • தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கி விட்டன. மேலும், 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் உள்ளன. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பின்னர், மேலும் 149 திட்டங்களில், 1,06,664 கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டை ஈர்த்து, 2,42,705 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை தமிழக அரசு அளித்துள்ளது.
 • தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கான நாற்றங்காலாக விளங்குவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பவையாகவும் திகழ்கின்றன. தமிழ்நாட்டில், 2,73,241 கோடி ரூபாய் முதலீட்டுடன், 1.52 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, 23.60 இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, ‘புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொள்கை’ இறுதி செய்யப்பட்டு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு உதவும் விதமாக, பல்வேறு வகையான மானியங்களை, அரசு முன்கூட்டியே வழங்கியது. மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் திறம்பட ஒருங்கிணைத்து, இந்திய அரசின் ‘அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின்’ மூலம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளது.

 • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஒரு சிறந்த நீண்டகாலக் கடன் வழங்கும் நிறுவனமாகத் திகழ்வதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், இதுவரை நிறுவனக் கடன் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுகின்ற வகையில், தமிழ்நாடு அரசு, இக்கழகத்தில், 1,000 கோடி ரூபாயை மூன்று வருடங்களில் முதலீடு செய்யும்.
 • தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்காக, 2020 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் தங்க விருதினை இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து, தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. பின்தள கணினிமயமாக்கல் முறையில், மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புத் திட்டம்’ உட்பட, பெரிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

எஞ்சிய கிராமங்களில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக மற்றும் அளவிடத்தக்க அலைவரிசையை வழங்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநிலப் பெரும்பரப்பு வலையமைப்பு, தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத்நெட்டை இணைப்பதன் மூலம், ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தளமான ‘ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு’ ஏற்படுத்தப்படும்.

 • அனைத்து நுகர்வோருக்கும் தரமான, நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரத்தை வழங்குவது தமிழ்நாடு உட்கட்டமைப்பின் ஒரு அடிப்படைக் கூறாகும். தமிழ்நாடு ஒரு மின் மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், 32,149 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறனை அடைவதற்கு, 15,745 மெகாவாட் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில், 16,166 மெகாவாட் மின்சாரம், நீர் மின்சக்தி உட்பட, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆற்றலாகும். நம்பகமான மின்சக்தி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு, தொடரமைப்பு மற்றும் பகிர்மான வலையமைப்பின் கொள்திறனை மேம்படுத்துவதற்காக, பெருமளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
 • தமிழ்நாட்டின் உயர்தர சாலைக் கட்டமைப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கின்றது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, மேம்பாலப் பணிகளும், பல்வழிச் சாலை மேம்பாலப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டச் சாலை வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் சென்னை எல்லை சுற்றுச் சாலை திட்டம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிப்பதனால், மாநிலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் 71,431 ஆக இருந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 45,489 ஆகவும், 2016 ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்பிற்கு காரணமான விபத்துகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 8,060 ஆகவும் குறைந்துள்ளன. உயிரிழப்பிற்கு காரணமான விபத்துகளைக் குறைப்பதில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது.

 • குறைந்த விலை பேருந்துக் கட்டணத்துடன், பேருந்து சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் பங்கினை மேலும் அதிகரிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயின் விளைவாக, பேருந்துப் போக்குவரத்தை இயக்குவதில் தீவிரக் கட்டுப்பாடுகள் இருந்தன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி வருகின்றன.
 • சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம்-ஐ இன் கீழ், வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சரால், 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை வழங்குகின்றன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 50:50 பகிர்வு அடிப்படையில், மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை வழங்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
 • கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில், தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்னணி வகிக்கின்றன. மத்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் வெளிப்புற நிதியுதவி முகமைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட பல்வேறு நகர்ப்புற உட்கட்டமைப்புத் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில், 10 எம்.எல்.டி. திறனுடைய இரண்டு மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்குத் தரமான வீட்டு வசதிகளை வழங்குவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரகப் பகுதியில் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கான்கிரீட் கூரையுடன் கூடிய ஒரு வீடும், நகர்ப்பகுதியில் வசிக்கும் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் கட்டித் தரப்படும். மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கட்டி முடிக்கும் தறுவாயிலிருக்கும் 2,57,925 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க உதவும் வகையில், பிரதம மந்திரியின் வீட்டுவசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடு ஒன்றிற்கு சிறப்பு கூடுதல் ஒதுக்கீடாக 70,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • காடுகளைப் பாதுகாப்பதற்கும், மரங்களின் பரப்பளவினை அதிகரிப்பதற்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையின்படி, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, தமிழ்நாட்டில் 8,302 ஹெக்டேர் அளவில் வனங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் 159 சதுர கி.மீ அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாட்டின் மனித வளத்தை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இளைஞர்களின் திறனை முழுமையாக மேம்படுத்த வேண்டும். எனவே, நம் மாநிலத்தில் முன்னுரிமை பெற்ற முதலீடாக கல்வி தொடர்ந்து விளங்கி வருகிறது. 2017-18 ஆம் ஆண்டிலிருந்து, 19 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 5 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
 • மாணவர்கள் தொடர்ந்து, இடைவிடாமல், கல்வி கற்பதை உறுதி செய்வதே, நடப்புக் கல்வியாண்டின் சவாலாகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சலுகைகள் இப்பெருந்தொற்றுக் காலத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
 • திறன் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவத்தை தொடர்ந்து அளித்து வருகிறது. வாகனம், வாகன உதிரி பாகங்கள், இயந்திரக் கருவிகள், மருத்துவமனை மற்றும் சுகாதார சேவைகள், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் பரிமாற்றம் ஆகிய துறைகளைச் சார்ந்த உயர்திறன் மேம்பாட்டு மையங்கள் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன. கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் உயர்திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுவதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
 • கோவிட்-19 பெருந்தொற்று தாக்கியபோது, புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளுவதில் தமிழ்நாடு அரசு பரிவுடன் நடந்து கொண்டது. மாநிலம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான கட்டுமானம் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 22,74,582 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு இரயில் சேவைகள் மூலம் 4,03,042 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான செலவை இந்த அரசு ஏற்றுக்கொண்டது.
 • பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலை தொழிலாளர்கள் நலனை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு 30.12.2020 அன்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நல வாரியத்தினை அமைத்தது.
 • பணிபுரியும் பெண்களின் நலனை மேம்படுத்த, இந்த அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், குழந்தை பாலின விகிதம் அதிகரித்து வருகிறது. சட்ட விதிகளை திறம்பட நடைமுறைப்படுத்தியதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க, சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 • ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருமணமாகாத பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோரைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
 • அனைத்து சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
 • ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். முதல்வரின் கோரிக்கைகளை ஏற்று 60:40 பகிர்வு அடிப்படையில் ஆதி திராவிடர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையை மறுசீரமைத்த மத்திய அரசுக்கு நன்றி.
 • தைப்பூசம் என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.

மேலும், பல்வேறு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தைப்பூசம் பண்டிகை தினத்தை பொது விடுமுறையாக இந்த அரசு அறிவித்துள்ளது. ஹஜ் மற்றும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியை அரசு உயர்த்தியுள்ளது. மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும்.

*கடந்த 2020 ஆம் ஆண்டு மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து, உறுதியுடனும், மனதைரியத்துடனும், நாம் மீண்டு வருவோம். வரும் ஆண்டுகளில் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் புத்துயிர் காணுவோம் என்ற நம்பிக்கையில், நம் தேசத்தின் மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழக மக்கள், இந்த முன்நிகழ்வில்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *