பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை.. மு.க.ஸ்டாலின்
7 பேர் விடுதலை பற்றி ஆளுனர் உரையில் எதுவும் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, பிப்-2

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்காக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் காலை 10.50 மணிக்கு வந்தார். அவரை சபாநாயகர் வரவேற்று சபைக்கு அழைத்து வந்தார். சரியாக 11 மணிக்கு ஆளுனர் பேச தொடங்கினார். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது ஆளுனர் அவர்களிடம் அனைவரும் உட்காருங்கள், உங்கள் கருத்துக்களை விவாதத்தின் போது எடுத்துச் சொல்லுங்கள். சட்டத்தை மதித்து நடங்கள். இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்றார்.
தொடர்ந்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் போட்டனர். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்து வெளியே வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்கின்றன. நாங்கள் வைத்த எந்த கோரிக்கையையும் கவர்னர் ஏற்க வில்லை. கவர்னர் இன்று சபையில் பேசும்போது, “மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார். மத்திய அரசுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து சலுகைகளை அறிவித்தவுடன் நான் ஒரு கருத்தை தெரிவித்தேன். தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு ‘லாலிபப்’ கொடுத்து இருக்கிறது என்று தெரிவித்தேன்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இது வரை ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. இது போன்று தான் மத்திய அரசு தொடர்ந்து வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் வகையில் பெட்ரோல், கியாஸ் விலை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
எனவே கவர்னர் உரையை புறக்கணிக்க முடிவு செய்து வெளிநடப்பு செய்தோம்.
கடந்த மாதம் 23-ந்தேதி கவர்னரை சந்தித்தோம். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்தோம். அதற்கான ஆதாரங்களையும் திரட்டி அவரிடம் வழங்கினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் கவர்னர் எடுக்கவில்லை. முதல்- அமைச்சருக்கும் மற்றும் அமைச்சர்களுக்கும் கவர்னர் பக்கபலமாக இருந்து வருகிறார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 2 வருடங்களுக்கு முன்பு கவர்னரிடம் கொடுத்து இருக்கிறார்கள். இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவும் நாங்கள் கவர்னர் உரையை புறக்கணிக்க முக்கியமான காரணங்கள் ஆகும். தொடர்ந்து இந்த கூட்டத் தொடரை தி.மு.க. புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறது. நாங்கள் மக்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செய்த முறைகேடுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டமன்றத்தில் பேசினால் அது எடுபடாது. அங்கு அனுமதிக்கவும் மாட்டார்கள்.
கேள்வி:- பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற் பீர்களா?
பதில்:- அந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலையில் பச்சை தலைப்பாகை கட்டியபடி வெளியே வந்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டபடியே வெளியே வந்தனர்.