”காவிரி காப்பாளன்” என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் பன்வாரிலால் புகழாரம்
டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால் காவிரி காப்பாளன் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப்-2

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநரை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடப்பு செய்தனர்.கூட்டத் தொடரை தொடக்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில்,
விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை, இந்த அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் வாயிலாக, காவேரி டெல்டா பகுதிகளிலுள்ள வேளாண் விளைநிலங்களும், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சட்டத்தின் மூலம், காவேரி டெல்டா பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றியதால், அவருக்கு வழங்கப்பட்ட ‘காவேரி காப்பாளன்’ என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் ஆகிறார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, குறுவை நெல் சாகுபடிக்காக, உரிய நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றே, மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்பிற்காக, 9,312 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூட, நமது மாநிலத்தில் உள்ள விவசாயிகள், பயிர்க் காப்பீட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பெறவேண்டும் என்பதற்காக, 2020-21 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் நிதிச் சுமையை இந்த அரசு ஏற்று வருகிறது.
இந்தியாவிலேயே, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, 2019-20 ஆம் ஆண்டில், 1,112 கோடி ரூபாய் மானியத்துடன் 6.52 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு முதல் இந்த அரசின் முயற்சிகளால், ஊரகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், கால்நடைத் துறையின் பங்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், மொத்தம் 1,06,277 கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு 1,06,277 கறவை மாடுகளும் 12,44,010 கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு 49,76,040 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு முதல், 3,60,620 ஏழைக் குடும்பங்களுக்கு 1,09,40,500 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. பெருகியுள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தீவனப் பயிர், தீவனம், உயர்தர கால்நடைப் பராமரிப்பு மற்றும் நிலையான சந்தைப்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டு, அவை தொடர்ந்து கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைவாசல், தேனி மற்றும் உடுமலைப்பேட்டையில் மேலும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகளை அரசு நிறுவியுள்ளது. இந்த அரசின் ஒரு முக்கிய சாதனையாக, சேலம் மாவட்டம் தலைவாசலில் ‘கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையம் மிக விரைவில் செயல்படத் தொடங்கும்.
நமது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், நமது மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் இயத அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருயத பொழுது, இலங்கை கடற்படையினர் அவர்களுடைய கப்பலைக் கொண்டு வேண்டுமென்றே தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகில் மோதியதன் விளைவாக, நான்கு தமிழக மீனவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.
இச்செயலை இந்த அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளையில், இம்மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரணமும், வாரிசுதாரர்களுக்கு அரசு சார்ந்த பணியிடமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்படி மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இலங்கை நாட்டின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க, அரசு தொடர்யது தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இவ்வாறு ஆளுனர் தெரிவித்தார்.