சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்?.. ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் விளக்கம்
மனிதாபிமானம் அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற டுவிட்டரில் பதிவு செய்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர், பிப்-2

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்டார். அதில், சசிகலா பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே, இது அரசியல்சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்று தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டிய எங்களை கட்சியில் இருந்து நீக்கியது போல ஓபிஎஸ் மகனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என கேள்விகளும் எழுந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு மலர் அலங்காரம் செய்வது என் கடமை. மனிதாபிமானம் அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற டுவிட்டரில் பதிவு செய்தேன் என்று கூறினார்.