அதிமுக கட்சி உடைய கே.பி.முனுசாமி காரணமாக போகிறார்.. மு.க.ஸ்டாலின் பரபரப்பு

கிருஷ்ணகிரி, பிப்-1

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் செல்லும் சாலையில், கே.பூசாரிப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும், நூறே நாட்களில் கோரிக்கை மனுக்களுக்கு தனி வாரியம் அமைத்து தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக பணி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் அமைச்சர் இல்லை. ஆனால் அமைச்சர் என்கிற போர்வையில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கே.பி.முனுசாமி. ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த நேரத்தில் அவரது பதவியை ஜெயலலிதா அவர்கள் பறித்து விட்டார்கள். ஏன் என்றால் ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முனுசாமியைப் பற்றி பேசுகிறபோது, 30 பெர்சண்ட் அமைச்சர் என்று சொன்னார். அதுதான் அவருடைய யோக்கியதை. அதனால் அவர் பதவியை அடுத்த நாளே பறித்து விட்டார்கள். அந்த அம்மையார் இருந்தவரைக்கும் அவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் தானே ஒரு மந்திரி என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லை, இன்றைக்கும் அவர்கள் கட்சி உடைப்பதற்கும் அவர் தான் காரணமாக இருக்கப் போகிறார் என்று செய்திகள் வருகின்றன. அதுபற்றி நமக்குக் கவலையில்லை.

கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று நாம் நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். ஆனால் நாம் மத்தியில் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் இப்போது சட்டமன்றத் தேர்தலின்போது சொல்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தபிறகு நம் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி நிச்சயமாக, உறுதியாக கல்விக் கடனை ரத்து செய்வோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவித்த அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க.வே ஏற்கும் என்று சொல்லி அதை செலுத்தி, பல பேருக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *