பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிப்பு

பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, பிப்-1

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

உஜ்வாலா எனப்படும் இலவச எரிவாயுத் திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இது மேலும் 1 கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நகர குழாய் எரிவாயுத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்கள் இணைக்கப்படும்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு பிரத்யேக குழாய் எரிவாயு இணைப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். அனைத்து வகையான இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தில் தடையற்ற விநியோகம், அதற்கான முன்பதிவுக்கான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்வித தங்கு தடையுமின்றி செயல்பட ஒரு பிரத்யேக எரிவாயு விநியோக இயக்கம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதேசமயம் பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *