தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைப்பு
தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பிப்-1

நாடாளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
குறைந்தவிலை வீடுகளை கட்டும் திட்டங்களுக்கு 2022 வரை வரி சலுகை அளிக்கப்படும். ரூ.3.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கத்துக்கான இறக்குமதி 12.5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பருத்தி, பட்டு, எத்தனாலின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும்.
பருத்திக்கான இறக்குமதி வரி 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.