மத்திய பட்ஜெட்; ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு
வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும். விவசாயக் கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லி, பிப்-1

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் வேளாண் துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்ட விவரம் பின்வருமாறு:-
”நெல், கோதுமை, பருப்பு வகைகள், பருத்தி ஆகியவை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் அளவு கடந்த 6 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. அனைத்துவிதமான பொருட்களின் உற்பத்திச் செலவிலிருந்து ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வது தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் தொகையும் படிப்படியாக உயர்ந்துள்ளது.
கோதுமையைப் பொறுத்தவரை கடந்த 2013-14ஆம் ஆண்டில் ரூ.33,874 கோடி கொள்முதல் செய்தது மத்திய அரசு. ஆனால், 2019-20ஆம் ஆண்டில் ரூ.62,802 கோடிக்குக் கொள்முதல் செய்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20ஆம் ஆண்டில் கோதுமை பயிரிட்டுக் கொள்முதலில் லாபம் அடைந்த விவசாயிகள் 35.57 லட்சம் பேர் பயணடைந்தனர். இது 2020-21ஆம் ஆண்டில் 43.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
நெல் கொள்முதல் கடந்த 2013-14ஆம் ஆண்டில் ரூ.63,928 கோடியாக இருந்த நிலையில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.1,41,930 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2020-21ஆம் ஆண்டில் ரூ.1,72,752 கோடியாக அதிகரிக்கும். நெல் கொள்முதல் மூலம் பலனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை கடந்த 2019-20ஆம் ஆண்டில் 1.20 கோடியாக இருக்கும் நிலையில் 2020-21ஆம் ஆண்டில் இது 1.54 கோடியாக அதிகரித்துள்ளது.
தானியவகையில் கடந்த 2013-14ஆம் ஆண்டில் ரூ.236 கோடிக்குக் கொள்முதல் செய்யப்பட்டது. இது 2019-20ஆம் ஆண்டில் ரூ.8,285 கோடிக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் இது ரூ.10,530 கோடியாக அதிகரிக்கும். இதேபோல பருத்தி கொள்முதல் 2013-14ஆம் ஆண்டில் ரூ.90 கோடியாக இருந்த நிலையில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.25,974 கோடியாக அதிகரித்துள்ளது.
2021-22ஆம் நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.16.50 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.