மியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம்! ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்
நேபிடா, பிப்-1

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல் என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.