வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அரசுடன் பாமக பிப்.3-ல் பேச்சுவார்த்தை

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசுடன் வரும் 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவுகளை பொறுத்து அரசியல் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-1

பாமக நிர்வாகக் குழு கூட்டம்இணையவழியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முன்னிலை வகித்தனர். கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-

தென்னிந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் சமூகநீதிச் செயல்பாடு குறைபாடுகளுடன் உள்ளது; தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டி என்பது சமநிலை சமுதாயங்களுக்கிடையே நடைபெறவில்லை. அதனால் சமுதாயங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் தனிப்பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வன்னியர்களின் வாழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதன் மூலம் தான், அவர்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற முடியும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் நன்றாக உணர்ந்து, அதற்காக கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதிப் போராட்டம், 21 உயிர்களை தியாகம் செய்தது ஆகியவற்றின் பயனாக 1989-ஆம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீட்டை அப்போதைய கலைஞர் அரசு வழங்கியது. 1980-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி, 21 உயிர்களை தியாகம் செய்த வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 108 சாதிகளுக்கு பகிர்ந்து வழங்கியது தான் தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் சமூகநீதி சூறையாடல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் கல்வி – வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை மருத்துவர் அய்யா அறிவித்தார்.

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று வரை மொத்தம் 9 நாட்களுக்கு 6 கட்டங்களாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே பல கட்ட பேச்சுக்கள் நடந்துள்ளன.

முதல்கட்ட போராட்டம் நடத்தப்பட்ட திசம்பர் ஒன்றாம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையிலான குழுவினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அழைத்துப் பேசினார். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, திசம்பர் 22ஆம் தேதி மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களைச் சந்தித்துப் பேசினர்.

தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. அடுத்தக்கட்டமாக ஜனவரி மாதம் 11ஆம் தேதி மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்புகளின் போது வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு, உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்ற புதிய நிலைப்பாட்டை மேற்கொண்டார். ஆனால், அதையும் ஏற்பது குறித்து அரசுத் தரப்பிலிருந்து நீண்டகாலமாக எந்த அதிகாரப்பூர்வ பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

வன்னியர் இடப்பங்கீடு குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு தொடர்பான முடிவை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பா.ம.க. நிர்வாகக் குழு மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, வன்னியர் இடப்பங்கீடு குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் வராத நிலையில், அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினார்கள். அப்போது வன்னியர்களுக்கான இடப்பங்கீடு குறித்து தமிழக அரசு குழுவும், பாட்டாளி மக்கள் கட்சி குழுவும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் சந்தித்து பேசலாம் என்றும், அந்தப் பேச்சுக்களின் போது வன்னியர் இடப்பங்கீடு குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர்கள் யோசனை தெரிவித்தனர்.

அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்த விவரங்கள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் விளக்கினார்கள். அதனடிப்படையில் நிர்வாகக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் முடிவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 3-ஆம் தேதி அரசுடனான பேச்சுகளில் பங்கேற்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பேச்சுகளின் முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *