எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு…
மும்பை, அக்டோபர்-30
ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு சிவசேனா கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அரசை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ”ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருகிறது. இது சர்வதேச விவகாரம் அல்ல என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு காஷ்மீர் சென்று கள நிலவரத்தை அறிய மத்திய அரசு அனுமதி அளித்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் காஷ்மீர் சென்றது, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக அத்துமீறி நுழைவதாகக் கருதப்படாதா? காஷ்மீர் பிரச்சினையை ஐநாவுக்கு கொண்டு சென்றதற்காக தொடர்ந்து நேருவை விமர்சிக்கும் போது, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களுக்கு ஏன்? அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.