எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!
ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி, ஜன-29

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.
ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் அவைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியிலும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதன்பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.