விவசாயிகளை காலிசெய்யக் கோரி போராட்டம்; டெல்லி சிங்கு எல்லையில் தடியடி, கண்ணீர்புகை, கல்வீச்சு..!

டெல்லி அருகே சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி அப்பகுதியின் பொதுமக்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். இது, கலவரமாக வெடித்து கல்வீச்சு, தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் என பதட்டம் நிலவியது.

டெல்லி, ஜன-29

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக தொடர்ந்த இப்போராட்டத்தில் குடியரசுதினத்தன்று டிராக்டர் ஊர்வலத்தால் கலவரம் நிகழ்ந்தது. இந்நிலையில், இன்று காலை டெல்லி-ஹரியானா எல்லையின் சிங்கு பகுதியில் இன்று காலை முதல் வழக்கத்திற்கு மாறாக போலீசார் குவிந்தனர்.

பிறகு காலை 11.00 மணி முதல் கூடிய அப்பகுதிவாசிகள் சுமார் 200 பேர், விவசாயிகளுக்கு எதிராகக் கோஷமிட்டு ஆர்பாட்டம் துவங்கினர். இவர்களில் வெளிப்பகுதியை சேர்ந்தவர்களும் தேசியக் கொடிகளுடன் இருந்தனர். அனைவரும் இணைந்து, சிங்கு எல்லையில் இருந்து விவசாயிகளை காலி செய்யும்படி கோஷமிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய இவர்களில் சிலர், கடந்த 40 நாட்களாக இப்போராட்டத்தால் அன்றாட வாழ்க்கை பாதித்திருப்பதாகப் புகார் கூறினர்.

வீட்டை விட்டும் வெளியில் வர முடியாமல் கைதிகளை போல் முடங்கி இருக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் ‘பாரத் மாதா கீ ஜெய்’, ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பப்பட்டன.

சுமார் 12.00 மணிக்கு போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக விவசாயிகளின் கூடாரங்களை திடீர் எனக் கிழித்தெறியத் துவங்கினர். இதை விவசாயிகள் தடுக்க முற்பட, இருதரப்பினருக்கு இடையே மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீடி எறிந்து கொண்டனர். இதையடுத்து சிங்கு எல்லை பதட்ட நிலையை எட்டியது. பிறகு டெல்லி போலீஸார் அங்கு கூடியிருந்த கும்பல் மீது தடியடி நடத்தினர்.

இதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, டெல்லி போலீஸார் கண்ணிர் புகை குண்டுகளையும் வீசினர்.

இரண்டு தரப்பினரையும் பிரிந்து டெல்லி போலீஸார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருதரப்பினருக்கும் இடையே எல்லை கோடு வகுத்து அதை எவரும் தாண்டாதபடி பாதுகாக்கத் துவங்கி உள்ளனர். எனினும், விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து விலகாமல் அதை தொடர்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *