டெல்லி வன்முறைக்கு ஜனாதிபதி கண்டனம்; வேளாண் சட்டங்கள் ரத்து இல்லை என திட்டவட்டம்..!!
டெல்லி, ஜன-29

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை மிகவும் துரதிர்ஷ்டமானது. கடந்த சில நாட்களாக தேசியக் கொடியும், அதிலும் புனித நாளான குடியரசு நாளில் அவமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்குப் பேச்சு சுதந்திரத்தை அளித்துள்ளது. அதே அரசியலமைப்புச் சட்டம்தான், சட்டத்தையும் விதிகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் 10 கோடி விவசாயிகளுக்கு உடனடியாகப் பலன் அளிக்கும்.
வேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாது. விவசாய சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
விரிவான விவாதங்களுக்கு பிறகே நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையில் இந்த புதிய வேளாண் சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 3ம் பாலினத்தோருக்கு சம உரிமைகள் அளிப்பதற்காக, பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியில் இந்தியா முன்னிலையில் இருப்பதை உலகமே பாராட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.