புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க-வில் இணைந்தார்..மோடிதான் பெஸ்ட் என பேட்டி..!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

புதுச்சேரி. ஜன-28

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் 26-ந் தேதி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர்.
தற்போது அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்தப்பின் பேட்டியளித்த நமச்சிவாயம் கூறுகையில், “ வளமான புதுச்சேரிதான் எங்களுடைய எண்ணம். அதன் காரணமாகவே பாஜகவில் சேர்ந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை பிரதமர் மோடி உருவாக்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார். மோடி தலைமையில் இந்தியா ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவை போல் புதுச்சேரியும் ஒளிர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவே இந்த முடிவை எடுத்தேன். புதுச்சேரியில் பாஜக ஆட்சியை நிச்சயமாக கொண்டுவர பாடுபடுவோம். பொது மக்கள் தயாராகிவிட்டனர். புதுச்சேரியில் 2021-இல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகல் பாராது உழைப்போம்” என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *