ஸ்டாலின் முருகனை பத்தி 10 நிமிஷம் பேச முடியுமா? – கலாய்த்த சீமான்

சென்னை, ஜன-28

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் வீட்டில் இன்று திருமுருகத் திருநாள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது;-

தலைநிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், தமிழ்ப்பேரினத்தின் இறைவனாகவும் இருக்கிற எங்கள் முப்பாட்டன், எம்மின மூதாதை முருகப்பெரும்பாட்டனுக்கு உரிய நாள் இது. அதை திருமுருகன் திருநாள் என ஆண்டுதோறும் நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றார். திருமுருகப் பெருவிழா என ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்சிப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி சார்பில் முன்னெடுக்கப்பட்டுப் பேரெழுச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குருநானக் ஜெயந்திக்கு, மகாவீர் ஜெயந்திக்கு, விநாயகர் சதுர்த்திக்கு, சரஸ்வதி பூஜைக்குப் பொது விடுமுறை இருக்கும்போது எம்மின மூதாதை, எம்மின இறை, முருகப் பெரும்பாட்டனின் தைப்பூசத்திற்கும் அரசு பொது விடுமுறை விடவேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று, இவ்வாண்டு முதல் தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது!

நாங்கள் முருகன் எங்கள் முப்பாட்டன் என்று சொல்லி, கையில் வேலை எடுத்தபோது எள்ளி நகையாடியவர்கள், ‘வேல்! வேல்! வெற்றிவேல்’ என்று படிப்படியாக அவர்களும் இன்றைக்குக் கையில் வேலேந்துவதைப் பார்க்கிறோம். அந்தப் பெரிய இயக்கங்களுக்கெல்லாம் நாங்கள்தான் வழிகாட்டியாக இருக்கிறோம்.

இந்நிலம் தமிழர் நிலம். வாழுகிற மக்கள் தமிழ் மக்கள். இவர்களுக்கான அரசியல் தமிழ்த்தேசிய அரசியல்தான். திராவிடர் என்று இங்கு யார் இருக்கிறார்கள்? தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியவை தமிழிலிருந்து திரிந்த, தமிழ் உமிழ்ந்த மொழிகள்தான். உலக மொழிகளின் தாய் தமிழ்மொழிதான். திராவிடம் என்பதை அரசியல் கோட்பாடாக இவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. இனமாகத்தான் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியல் கோட்பாடு என்றால், அவர்களை எதிர்த்துள்ளீர்களா? சமரசம் செய்யவில்லையா? எதிர்த்திருந்தால் முப்பதாண்டு காலம் திராவிடக் கட்சிக்கு பார்ப்பனரான ஜெயலலிதா எப்படி தலைவியாக இருந்து அடக்கி ஆண்டு அதிகாரத்தைச் செலுத்தினார்? இதுதான் நீங்கள் வீழ்த்தியதா? நாங்கள்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியத்திற்கு எதிராகச் சண்டையிட்டுள்ளோம். ‘ஆரியங்கண்டாய், தமிழம் கண்டாய்’ என்றுதான் திருநாவுக்கரசர் பாடியுள்ளார். அதிகாரம் ஆக்கிரமிப்பு இது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் நிலம். திராவிடமென்றால், அதன் மொழி என்ன? அதன் அடையாளக்கூறு என்ன? குழந்தைக்குப் பூச்சாண்டி வந்துவிடுவான் என்று பயமுறுத்தி சோறூட்டுவதைப் போலத்தான் இந்தப் பார்ப்பனப் பூச்சாண்டியைக் காட்டி எங்கள் நிலத்தின் அதிகாரத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்.

பார்ப்பனர்கள் மூன்று பேரைக் காட்டி முப்பது திராவிடர்கள் மேலே ஏறிக்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு எங்களை அடிக்கிறார்கள். எங்கள் பண்பாட்டை, எங்கள் வழிபாட்டை, எங்கள் மெய்யியல் கோட்பாட்டை முழுக்கச் சிதைத்து முடித்துவிட்டார்கள். கரிகால் வளவன் கல்லணை கட்டினான் என்பதால் அவனைத் திராவிட மன்னன் எனச் சொந்தம் கொண்டாடுவதும், அருண்மொழிச்சோழனை தமிழ் மன்னன் எனக்கூறி, அவனை ஆரிய அடிமை எனப் பழித்துரைப்பதும் இவர்களது நுட்ப அரசியல்.

கீழடி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரீகத்தைத் திராவிட நாகரீகம், ஆரியப் பண்பாடு என்பது மடமைத்தனமில்லையா? நாங்கள் எழுச்சியுறாத இனமாக இருந்தபோது அவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். இன்று நாங்கள் பேரெழுச்சியாக வளர்ந்து வருகிறோம். இனி அவர்களது பொய்கள் எடுபடாது. வேல் யாத்திரை நாங்கள் கட்சி தொடங்கிப் பத்தாண்டுகள் தான் ஆகிறது. ஆனால் பாஜக தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது? ஏன் எங்களுக்கு முன்பு அவர்கள் முருகன் குறித்து, வேல் யாத்திரை குறித்து, தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது குறித்து வாய் திறக்கவில்லை.

டெல்லியில் நடப்பது விவசாயிகளுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. 130 கோடி மக்களுக்குமான போராட்டம். அதை முடக்குவதற்கு வன்முறையாளர்கள் நுழைந்துவிட்டார்கள் எனக் கூறி எப்படி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முடக்கினார்களோ, எப்படி ஸ்டெர்லைட் போராட்டத்தை முடக்கினார்களோ அதுபோல முடக்க நினைக்கிறார்கள். டெல்லி செங்கோட்டையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் விவசாயிகள் கொடிதான் பறக்கவேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு; கோட்பாடு.

யானைகள் பல்லுயிர்ப்பெருக்கத்தில் அதிமுக்கிய உயிரி. இந்தியா முழுக்க 1,500 யானைகள்தான் இருக்கின்றன என்கிறார்கள். அதனை அழிப்பது என்பது உயிர் சுழற்சியையே அழிப்பதாகும். அந்த மாதிரியான செயல்கள் நடைபெறக்கூடாது என்றுதான் சூழலியலுக்கு ஒரு பாசறை வைத்து உயிர்மநேய அரசியலை தமிழர் நிலம் முழுக்கக் கொண்டு செல்கிறோம். எங்கள் கட்சியின் கோட்பாடே அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது என்பதுதான். சாதி, மத, கடவுள் உணர்ச்சிகள் மனிதர்களுக்கு மட்டும்தானது. ஆனால், அரசியல் என்பது அனைத்து உயிர்களையும் காப்பதற்கானது. மனிதர்களுக்கு மட்டுமான சாதி, மத உணர்ச்சியை அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் கலந்துவிடக்கூடாது அதுவே அரசியலாகிவிடக்கூடாது என்பதால்தான் திரும்பத் திரும்ப உயிர்மநேய அரசியலைக் கற்பிக்கிறோம்.

ஸ்டாலின் கையில் வேல் வைத்திருந்ததை குறிப்பிட்டு பேசிய சீமான், முருகனை பத்தி 10 நிமிஷம் ஸ்டாலினால் பேச முடியுமா என கேள்வி எழுப்பினார், பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்றுவிட்டு பின்னர் எல்லோரும் எதிர்க்க தொடங்கியதும் எதிர்த்தவர் ஸ்டாலின். அரசியல் நிர்பந்தத்தால் நாங்கள் இந்துக்கள்; நாங்கள் தான் இந்துக்களுக்கு இதை செய்தோம்; அதை செய்தோம் என்று கூக்குரலிட்டு வருகின்றார்கள். கேட்டால் எங்களை பாஜகவின் ‘பி டீம்” என்பார்கள் உண்மையில் அவர்கள் தான் “மெயின் டீம்”. தற்போது முழு பாஜகவாக திமுக மாறி நிற்கிறது. வேறு வழியின்றி இந்தக் கொடுமையெல்லாம் சகித்துக்கொண்டு போகவேண்டியுள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *