வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம்.. ராமதாஸ் மீது ஸ்டாலின் புகார்

வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை, ஜன-28

கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று திமுகவில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார். அப்போது பேசிய ஸ்டாலின்,

வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி – உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க. ஆட்சி. தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க.ஆனால், ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக – சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீங்கள் எல்லாம் விலகி – இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *