ஜெயலலிதா பிறந்தநாள் விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு ஆண்டுதோறும், அரசு விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, ஜன-28

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

பின்னர் உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, பல்வேறு சோதனைகளை வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா. பெண்கள், குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரணாக விளங்கினார். அவரது வழியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தற்போது அதிமுக அரசு அரணாக விளங்குகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களின் உயர்கல்விக்கு அரசு சார்பில் அதிக அளவு நிதி செலவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 32 ஆக இருந்த நிலையில், அவரது வழியில் செயல்படும் அரசின் நடவடிக்கையால் தற்போது 100க்கு 49-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான மாணவர்கள் உயர்கல்வி பயில்வது தமிழகத்தில் தான். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும், காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு ஆண்டுதோறும், அரசு விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *