உயிரிழந்த சடலத்தை காட்சிப்படுத்துவது மீட்பு பணி விதிமுறைகளுக்கு எதிரானது…
சென்னை, அக்டோபர்-30
சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சுஜித் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. உயிரிழந்த சடலத்தை காட்சிப்படுத்துவது மீட்பு பணி விதிமுறைகளுக்கு எதிரானது. பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது. குழந்தை சுஜித்தை மீட்பதற்கு, மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுஜித்தைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றினோம், ஆனால் முடிவு எதிர்மறையாக கிடைத்து விட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தவரின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என மத்திய அரசின் வழிமுறைகள் உள்ளன. அதேபோல் வெளியே எடுக்கப்பட்ட உடலை எப்படி காண்பிக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன. கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பிறகு, இறந்தவர்களின் உடல்களை காண்பிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதால் தமிழகத்தின் தென்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
எனவே, முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.