நினைவு இல்லமான வேதா நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் வேதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, ஜன-28

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்தக் குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

‘வேதா நிலையம்’ 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

 ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கில் ஒரு பகுதியாக அவரது பொருட்கள் மதிப்பிடப்படவில்லை என்பதால் நினைவு இல்லத்தை திறக்கலாம், ஆனால் பிரதான கட்டிடத்துக்குள் யாரும் நுழைய கூடாது. பொதுமக்களையும் அனுமதிக்கக்கூடாது.நினைவு இல்லத்தை திறந்தப்பின் அதைப்பூட்டி சாவியை பதிவாளரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் சென்னையில் போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் ஜெயலலிதா படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

வேதா இல்லத்தின் பெயர் பலகையையும், நினைவு இல்ல கல்வெட்டினையும் முதல்வர் பழனிசாமி மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, ரிப்பன் வெட்டி வேதா நினைவு இல்லத்தினுள் சென்றார். இல்லத்தினுள் சென்ற முதல்வர் பழனிசாமி வரவேற்பரையில் இருந்த குத்து விளக்கை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *