எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை…பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

தர்மபுரி, ஜன-27

தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக பிரமுகர்களின் இல்லப் புதுமனை புகுவிழா, காதணி விழா, மருத்துவமனை திறப்பு விழா, கட்சி அலுவலகத் திறப்பு விழா என நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. 234 தொகுதிகளிலும் மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி அமைக்கும் பணி வரை நாங்கள் முடித்துத் தயாராக உள்ளோம்.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவுக்குப் பின்னர் தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவோம். செயற்குழு, பொதுக்குழு பிப்ரவரி மாதத்தில் நடக்கலாம். அதுபற்றித் தலைமைக் கழகம் விரைவில் அறிவிக்கும்.

சசிகலா விரைவில் முழு உடல்நலன் பெற்று வர வேண்டும். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவருக்கு வயதாகி விட்டதுடன், உடல் நல பாதிப்புகளும் வந்துவிட்டன. அதேநேரம், நானும் ஒரு பெண் என்ற வகையில் அவருக்கு என்னுடைய ஆதரவு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து பலவற்றையும் கவனித்துக் கொண்டவர். எனவே, அவர் அரசியலுக்கு வரலாம். அதேநேரம், அவர்களுடைய உள்கட்சி விவகாரம் பற்றி நான் அதிகம் பேச முடியாது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர்.

100 நாள்களில் மக்களின் பிரச்னை தீரும் என்று கூறும் ஸ்டாலின், அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்? எனவே, வாக்குறுதி யார் வேண்டுமானாலும் அளிக்கலாம், அதை நிறைவேற்றுவது முக்கியம். கமல் ஹாசனுக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பது இந்தத் தேர்தலில் தெரிய வரும் என்று கூறிய அவர், அதிமுக கூட்டணியில் எற்கெனவே கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளை இந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம்

என்று தெரிவித்தார்.

2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிக தரப்பில் பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *