மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை

அதிமுகவை வெற்றி பெறச் செய்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜன-27

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது;-

”முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயரைப் பெற்றவர் ஜெயலலிதா. இந்தியாவில் அதிக நாள்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற சிறப்பை பெற்றவர். தமிழக மக்களுக்கு தாயாக இருந்து திட்டங்களை அடுத்தடுத்து ஜெயலலிதா நிறைவேற்றி வந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்த, சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை வகுத்து, பெண்களின் முன்னேற்றத்திற்கு ஜெயலலிதா பெரிதும் உதவினார். பல்வேறு பெண்கள் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் விரும்புகின்றனர்.
ஜெயலலிதா தமது செயல்களால் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்டார்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா. பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன்.

மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அவர் தலைமையேற்றுள்ள திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *