ஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..!

விஜய் நடித்த மாஸ்டர் படம் ஜனவரி 29 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

சென்னை, ஜன-27

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிப்போனது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால், திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ரிலீசான படம் தான் மாஸ்டர். பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் வெள்ளியன்று (ஜனவரி 29) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்ட மாஸ்டர் படம், அடுத்த 16 நாள்களில் ஓடிடியில் வெளியாகிறது. ஜனவரி 29 முதல் இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் படத்தை ஓடிடியில் காண முடியும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *