சீர்காழியில் நகை வியாபாரி மனைவி, மகன் கொலை, 16 கிலோ தங்கம் கொள்ளை; என்கவுண்டர் செய்த போலீஸ்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவரை காவல்துறை என்கவுண்டர் செய்தது. போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது கொள்ளையர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 கொள்ளையர்களிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மயிலாடுதுறை, ஜன-27

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார் . மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48 ) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளிவில் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார். அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் சிடி ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டு வாசலில் இருந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா இன்ஸ்பெக்டர் மணிமாறன், சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து காயமடைந்த தன்ராஜ் சவுதரி அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த கும்பல் 5 பேர் கொண்ட கும்பல் ஆக இருந்துள்ளது. இவர்கள் முகக்கவசம் அணிந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் இந்தியில் பேசியதால் வடமாநிலத்தில் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காரில் தப்பிச் சென்ற கொள்ளை கும்பல் சீர்காழி புறவழிச்சாலையில் மேலமாத்தூர் செல்லும் பகுதியில் அந்த காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்ற சம்பவம் சீர்காழி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர். அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள் சீர்காழியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற 2 கொள்ளையர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 16 கிலோ நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *