சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..!

72-வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்னை, ஜன-26

72-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா நடைபெறும் இடத்துக்கு காலை 7.52 மணிக்கு வந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவரை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்து இறங்கினார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கிருந்த முப்படை தளபதிகள், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சிறப்பு தலைமை இயக்குனர் ராஜேஷ் தாஸ், சென்னை போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை கவர்னருக்கு எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டு இருந்த உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்த பகுதியில் மலர் தூவியது.

அதைத்தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சாா்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெறவுள்ளன.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பாா்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட உள்ளது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *