72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றினார்.

டெல்லி, ஜன-26

நாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டன. 72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். முப்படைகளின் வலிமைகள் மற்றும் சாகசங்கள் இந்நிகழ்வின் போது பறைசாற்றப்பட்டன. ரஃபேல், ஜாகுவர், மிக்-29 ஆகியவை அணிவகுப்பில் இடம்பெற்றன.

ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். டெல்லி குடியரசு தின விழாவில் வங்கதேசத்தின் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். வங்கதேசம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக டெல்லி ராஜபாதையில் 8.50 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3.50 கிலோ மீட்டருக்கு மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகளை பார்வையிட 4,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *