தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, ஜன-25

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மகாத்மா காந்தி பிறந்த நாள் ஆகிய முக்கிய தினங்களில் மாநிலம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளின் சார்பாக கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களின் எதிர்ப்பினை சமாளிக்க ஆளும் அரசு கிராம சபைக் கூட்டங்களை நடத்தாமல் தவிர்ப்பதாகக் கூறி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே இந்த முறை குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு திங்களன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதுதொடர்பாக சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்’ கூறப்பட்டுள்ளது.