ஸ்டாலினுக்கு கண்ணு தெரியாது, அரசை குறை கூறுவதே வாடிக்கை-ஜெயக்குமார்
சென்னை, அக்டோபர்-30
முத்துராமலிங்கர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தவுடன் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து தரப்பும் நான்கு நாட்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஊன், உறக்கமின்றி மீட்புப் பணியாற்றியதை மக்கள் அறிவார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் குறை காண்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்.
போர்கால அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டது. ஆனால் ஸ்டாலின் இதுபோன்று பேசிவருவதால்தான் மக்கள் அவருக்கு நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர். தொடர்ந்து அவர் இவ்வாறு பேசினால் அடுத்து வரும் தேர்தல்களிலும் மக்கள் இதையே செய்வார்கள். தன் கண்ணில் சுண்ணாம்பை வைத்துக்கொண்டு ஸ்டாலின் பார்க்கிறார். அதனால் ஸ்டாலின் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை” என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.