73 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம்.. கால்கோள் விழாவை நடத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை பேரூர் செட்டி பாளையத்தில், 73 ஜோடி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மணமக்களுக்கு “அம்மா” வீட்டுச் சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கான கால்கோல் விழாவை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடத்தி வைத்தார்.

கோவை, ஜன-25

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 73 ஜோடி மணமக்களுக்கு 73 வகையான அம்மா வீட்டு சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான கால்கோள் நாட்டுவிழா பேரூர் செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு விழாவிற்கான கால்கோள் நாட்டினார். இதனை தொடர்ந்து போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் நிதிக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 73 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சி கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடத்தபட்டு வருகிறது. வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெரும் இத்திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் வழங்கபட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. அனைத்து மக்களும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூறுகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு கடந்த இரண்டு நாட்களாக கோவையில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களே சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *