சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள்.. விரட்டியடித்த இந்திய வீரர்கள்..!
சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.
சிக்கிம், ஜன-25

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல், மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுரு முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன்பு வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா என்ற சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை வழியாக சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பிச் செல்லும்படி கூறினர். ஆனால் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை கைவிடாமல் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், 20 சீன வீரர்களும் 4 இந்திய வீரர்களும் காயமடைந்திருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.