ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார்… கோவையில் முதல்வர் பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அதிமுகவுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார் என கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

கோவை, ஜன-24

‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். இன்று இரண்டாவது நாளாக கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

காலையில் புலியகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின், ‘வேல்-ஐ’ கையில் எடுத்து விட்டார். கடவுளை இழிவாக பேசிய அவரது கையில் வேல்-ஐ கொடுத்துவிட்டனர். நாம் மனதார பிரார்த்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஸ்டாலின் உள்ளே ஒன்று பேசுவார், வெளியே ஒன்று பேசுவார். அவருக்கு கடவுள் அருள்புரிய மாட்டார். ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். முருகனின் வரம் அதிமுகவுக்கு தான் கிடைக்கும். பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அனைத்த மதங்களையும் சமமாக எண்ணுகிறது. தேர்தல் நெருங்கினால், திமுகவினர் பகல் வேஷம் போடுகின்றனர்’’ என்றார்.

சிங்காநல்லூர் சந்திப்பில் முதல்வர் கே.பழனிசாமி பேசும்போது,‘‘ இன்றைக்கு ஸ்டாலின் கையில் வேல்-ஐ பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார். இயற்கையாக இறைப்பற்று உள்ளவர்களுக்கு தான் இறைவன் அருள் கிடைக்கும். தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் நாடகத்தை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் அவர்களுக்கு இறைவன் சரியான தீர்ப்பை கொடுப்பார். தேர்தல் வந்தால் அத்தனை நாடகங்களையும் போடக்கூடிய ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின். கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நாடகத்தை ஏற்கனவே அரங்கேற்றி விட்டார். கோவையில் ஸ்டாலின் அரங்கேற்றிய நாடகம் மக்களிடம் எடுபடவில்லை. நாடகமாடி மக்களை ஏமாற்றி, மக்களை திசைதிருப்பி வெற்றி பெற திட்டமிட்டுள்ள ஸ்டாலின், செல்லும் இடங்களில் எல்லாம் பொய் கூறி வருகிறார். அது இத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். அதிமுக எதை செய்ய முடியுமோ அதை சொல்லும். எதை செய்தமோ, அதை சொல்கிறோம். திமுக ஒரு அராஜகக் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் தலைவிரித்தாடும். அராஜகம், நில அபகரிப்பு, மின்வெட்டை திமுக கொண்டு வரும். மக்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும். சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும், தடையில்லாத மின்சாரம் இரண்டும் இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால், அவரது குடும்பத்துக்கு மட்டும் தான் நன்மை கிடைக்கும். அதிமுக ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் நன்மை கிடைக்கும். தில்லுமுல்லு செய்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார். திமுக ஒரு வாரிசுக் கட்சி. தீயசக்தி திமுகவை நிராகரிப்போம். திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கேரளாவில் ஒரு யூனிட் மின்சாரக் கட்டணம் ரூ.6. ஆண்டுக்கு சராசரியாக 8 ஆயிரம். 5 ஆண்டுகளுக்கு ரூ.40 ஆயிரம். இதை தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கியிருக்கிறது. ஸ்டாலின் வீட்டுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. கரோனா காலத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்தோம். அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார்.

பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் முதல்வர் கே.பழனிசாமி பேசுகையில்,‘‘ தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் கருத்து கேட்கின்றார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போதும், இதேபோல், கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, பொய் கருத்துகளை மக்களிடம் பரப்பி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதேபோல், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் கருத்துகளை மக்களிடம் கூறி வெற்றி பெற ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

2019-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் திமுகவினர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எந்த ஆட்சி வந்தால், நாடு வளரும், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை எண்ணிப்பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், புதிய தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகின்றன. 2019-ம் ஆண்டு உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்று 304 நிறுவனங்களுன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும் போது, 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கரோனா காலத்திலும் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்து ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் 74 நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்துள்ளனர். இதன் மூலம் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை மாவட்டத்துக்கு தேவையான தடையில்லாத மின்சாரத்தை இந்த அரசு வழங்கியுள்ளது. 2006 முதல் 11 வரையிலான திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. இதனால் தொழில் பாதித்தது. பொருளாதாரம் சீரழிந்தது. அந்த நிலையை மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. தமிழக அரசின் நிர்வாகம் சிறப்பாக உள்ளது. கல்விமுறையை மேம்படுத்தி, உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையை 100-க்கு 49 சதவீதம் பேர் உயர்த்தியுள்ளோம்.

இத்தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரையும், அமைச்சர்களையும் சந்திப்பதில்லை. தொகுதி மக்களையும் சந்திப்பதில்லை. திட்டப்பணியையும் நிறைவேற்றுவதில்லை,. பொய் வாக்குறுதிகளை கூறி, தில்லுமுல்லு செய்து சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக எம்எல்ஏ வெற்றி பெற்று எந்த பலனும் இல்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதால், மக்களின் கோரிக்கைகளை அவர், அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை,’’ என்றார்.

இந்நிகழ்வுகளின் போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *