மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை.. ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு, ஜன-24

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை, திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் மக்களை மதிக்கவில்லை. தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதுதான் உண்மை.

தமிழ்ப்பற்று மிக்க தமிழ் மக்களைப் பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் கலாசாரம், பண்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய பாட்டி இந்திரா காந்தி முதல் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல மரியாதையைக் கொடுத்து வருகின்றனர். நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன். நான் மற்றவர்களைப் போல அறிவுரைகள் சொல்வதற்காக இங்கு வரவில்லை. உங்களின் பிரச்னைகளை கேட்பதற்காக வந்துள்ளேன். உங்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்க பாடுபடுவேன்.

நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழ் மொழியை மதிக்கிறேன். தமிழகத்தில் இயற்கை வளங்கள், வாய்ப்புகள் வசதிகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியை அடையவில்லை. அதற்கு காரணம் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உள்ளிட்டவை தமிழக மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் தில்லியில் கடும் குளிரிலும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசோ பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய தமிழக ஆட்சியை மோடி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்குமானால் மக்களுக்கு தேவையானவற்றை காங்கிரஸ் கட்சி செய்யும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அதைச் சொல்லவே இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், மரியாதைக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *